Skip to main content
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள், வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு, சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி, காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின், மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம்,

"அம்மா! சிறுகிழங்கு, கேரட் பொரியல் தான சரியா? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள்.

"ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்..


"சரிமா, வீட்டுக்கு வர வழில பாத்தேன், திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க?
கருப்பசாமி அவருக்கு என்னாச்சு? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!"


கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர்; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நிறைந்த சிவப்பற்று கொண்டவர். சிவராத்திரி அன்று நடக்கும் கலைநிகழ்சியின் முழுத் தொகையும் அவரே கொடுப்பார்.

மிகுந்த ஊர்பற்றுக் கொண்டவர். வெளியூர்களுக்கு சென்றாலும் சொந்த ஊரில் தான் சாகும் வரை இருக்க வேண்டும். வெளியூருக்கு குடிபெயர்ந்து போவது தன் உயிரை விடுவது என தன் தந்தைச் சொல் கேட்டு வழந்ததால் தானும் அதையே கடைபிடித்து வெளியூர்களுக்கு படிக்க, பணிக்கு செல்லும் பிறருக்கும் சில ஆண்டுகள் இருந்து விட்டு திரும்பி சொந்த ஊருக்கே வந்து விடணும் என சொல்லியும் வருவார்..

நகர்மன்ற உறுப்பினராக நான்கு முறை இருந்தவர். தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அவரே தேர்ந்தெடுக்கப்படுவார்
எந்த கட்சியையும் சாராது எப்போதும் சுயட்சையாக நின்று வெற்றி பெறுபவர். ஆனால் எல்லா கட்சியினரும் இவருடன் சுமூக போக்கைக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் எல்லா ஊர்களிலிருக்கும் பெரிய வீடு என்று சொல்லி அளவில் பெரியது என்பதல்ல , ஊர் கோவில் திருவிழாக்களில் வசூல் வாங்க முதலில் செல்லப்படும் வீடு என நல்லவை, கெட்டவைகள் என யாவற்றிக்கும் முன்னிறுத்தப்படுபவர்கள் என்ற அனைத்து அம்சங்கள் ஒருங்கப் பெற்றவர்.

.குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்தும் வருபவர். உண்மையில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்களிடம் அடிக்கடி கேட்பதுமில்லை. கடன் என்று சொல்லவதைக் காட்டிலும் பண உதவி தருபவர் என்றே சொல்லலாம்.


கயல் அவள் அம்மாவிடம் கேட்ட கேள்விக்கு, வேலையைப் பார்த்துக் கொண்டே

"அது சரியா என்ன பிரச்சனனு தெரிலமா! ஆனா கொஞ்ச நாளா உடம்பு சரியில்லனு வெளில வராம இருந்தாங்க, வெளில வர ஆரம்பிச்சப்போ முகத்தல முன்ன இருந்த கலை இல்ல, யார்டயும் முகங்கொடுத்து பேசல, தீடிர்ன்னு மறுபடியும் உடம்பு சரியில்லனு சொல்லி எல்லா கமிட்டில இருந்தும் அவரே விலகிடாராம், கடைலயும் வேல பாக்குற பசங்க மட்டும் கொஞ்ச நாள் கடயத் தொறந்துட்டு இருந்தாங்க, அப்றம் கடயையும் வேற ஆளுக்கு வித்துடாங்க, ஜாதகம் பாத்ததுல நேரம் சரியில்ல வெளிய தங்க சொன்னதா இப்ப கொஞ்ச நாளா வெளியூர்ல தங்குனாங்க, அப்றம் ஒருநாள் வந்து வீடயே காலி பண்ணிட்டு போய்டாங்க. கூடயே சுத்துன பயலுகளும் எதும் பண்ண மாறி தெரில, எல்லாவனும் நல்லா இருக்குற வர தா வருவானுக, கஷ்ட காலத்துல எவனும் வரல, ஆனா அவங்க இங்க இருந்த இருப்புக்கு, எங்க போனாலும் அது வராது. வெளியூருக்கு மாற போனவங்க ரெம்ப பேருக்கு அப்டி சொந்த ஊரை விட்டு போக கூடாது ன்னு அவங்களுக்கு உதவி பண்ணி இங்க இருக்க வச்சுருக்காரு, அவரே வெளியூர் போராறுன அப்டி என்ன கஷ்டமோ " என முழு சோக கதையைச் சொல்லிப் பரிதாபம் பட்டுக்கொண்டார்..

"ஏம்மா! காசு இருக்கு, பிற எங்க போனாலும் என்ன அவங்களுக்கு இங்க இருந்த மாதிரி தான் இருக்க போறாங்க " என இயல்பாய் வினாவினாள்..

"பேரு, மதிப்பு லாம் இங்க இருந்த மாதிரி வந்துருமா? யாரு எப்ப எங்க பாத்தாலும் வணக்கம் வைப்பாங்க, அவரும் எந்த தலகணமும் இல்லாம எவ்ளோ பணிவா நடந்துக்குவாரு,
எனக்கு தெரிஞ்சு தண்ணீ குழாய் பதிக்குறப்ப அந்த கட்சிகாரங்க கூட பிரச்சன வந்துச்சு, இவரு அவங்க மேல புகார் கொடுத்தாரு, அந்த வழக்குல அந்த கட்சிகாரங்களுக்கு எதிரா தான் முடியா போது,
அவங்க தான் சாமியார் வச்சு எதாது செஞ்சுருபாங்க மாறி தெரிது" என்று காலை மாலையில் கோலம் போடும் போதும் பால் வாங்க வரும் போதும் சேரும் தனது செய்தி சேகரிப்பு குழுவினரிடம் கேட்டிருந்த அரசல் புரசல்களைச் சொன்னார்..

" என்னது சாமியாரை வச்சா..? செய்வின மாறி சொல்றீங்களா, அப்டி இருந்தா எதிரி நாட்டை இது பண்ணி காலி பண்ண வேண்டியதான ஏன் போர் பண்ணிட்டு இருக்காங்க? சும்மா இல்லாம எதயாது கிளப்பி விட்டுறது, அப்றம் அதயே நம்ப ஆரம்பிச்சுறது.
அப்டி எதாது பண்ணனும்ன ஆள வச்சு அடிச்சுட்டு போக மாட்டாங்களா? சாமியார வச்சு அது இது ன்னு " என தர்க்கக் கேள்விகளை அடுக்கினாள்..

ஆனால் அவள் கேட்ட தர்க்கக் கேள்விகளுக்கு பதில் அவரிடத்தில் இல்லாததால் அவற்றை விடுத்து

"அடிதடியா, ஊர் ஆதரவே அவருக்கு இருக்கு, அப்டி எதாது பண்ணா! சும்மா விட்டுருவாங்களா?

சரி அத விடு! நல்லா மனுசன் தா! அவருக்கு அப்டி நடக்கனும் விதில இருக்கு போல, ம்ம் நம்ம கைல என்ன இருக்கு,
சரி நீ பூக்குழி வர இங்க இருப்ப தானா?" என்று நீண்ட உரையாடலின் தடத்தை மாற்றினார்..

" என்னம்மா! சாதரணாம விடுன்னு சொல்ற? அவரு நமக்கும் எவ்ளோ உதவி பண்ணிருக்காரு! ஏன்? அவரு தான எனக்கு கல்விகடன் வாங்க உதவி பண்ணது, இல்லேன அந்த மேனஜர் எத்ன நாள் அலய விட்ருப்பான்" என அந்த நாட்களை ஒரு நொடி நினைத்து கண் வியப்புற்று கேட்டாள்..

"அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற? ஆமா ஓன்கூட தாங்கிருக்குற அந்த பிரியா கல்யாணம் அடுத்த மாசம் தான சொன்ன? நாங்களும் வரணும்ல? " என்று மீண்டும் அடுத்தத் தடத்திற்கு நகர்த்தினார்..

"சரி விடுங்க,
நா பூக்குழி வரலாம் இருக்க முடியாது, லீவு அவ்ளோ இல்ல, பிரியா கல்யானணதுக்கு வேற லீவு எடுக்குறதால, அதான் பூக்குழிக்கு முந்தன நாள் டிக்கெட் போட்ருக்கேன்.

சரிமா, நா துளசி வீட்டுக்குப் போய்டு வந்துரேன் " என்று ஊருக்கு வந்ததும் முதல் நாளிலே செல்வதை வழக்கமாக வைத்திருந்த தன் தோழி வீட்டுக்குக் கிளம்பினாள்

"சரி, போய்டு சீக்ரம் வந்துரு, வரும்போது துளசியும் கூட்டு வா, அவள மளிக கடைல சாமான் வாங்கும் போது அப்பப்ப பாக்குறது தா, வீட்டுக்கு நீ இல்லாம வரகூடாது ன்னு முடிவுல இருப்பா போல அந்தா இந்தான்னு சொல்லி வர மாட்டா" என்று புன்முறுவலுடன் சொல்லி அனுபின்னார்..

அவள்ட கேட்டா தான் சரியா இருக்கும் என்று மனதில் நினைத்தவாரு துளசி வீட்டிற்குச் சென்றாள் கயல்.

துளசியும் கயலும் பள்ளிகூடத் தோழிகள். தான் இருக்கும் இடத்தில் சுற்றி சிரிப்பு அலையை  எழுப்பிக் கொண்டிருப்பவள்.   எட்டாவது இறுதித்தேர்வு முடித்து விடுமுறையில் இருந்த நாளில் துளசியின் தந்தை இரண்டாவது மாரடைப்பில் இறந்து விடுகிறார். கற்றிருந்த தையல் க்லையால்  துளசியை பத்து வரை கடத்த முடிந்தது. அதற்கு மேல் படிக்க வைக்க  பணமும் மனமும் இல்லாததால் நிறுத்த நினைத்த துளசியின் படிப்பைமளிகை கருப்பசாமி அவருக்கு இது தெரிந்து மேலும் படிக்க வைக்கச் சொல்லி உதவியும் செய்தார். 

ஆனால் அதனை பன்னிரண்டிற்கு மேல் செய்யத் துளியும் இடம் தர வில்லை துலசியின் அம்மா. அதற்கு மேல் அவளும் அம்மாவுடனே தையலில் உதவி செய்து வந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து இருந்து வந்த அந்த குறும்பு பேச்சு, வெகுளித்தனமும்கலகலப்பாக பெரியோரிடமும் வாதாடும் இயல்பு, அக்கம்பக்கத்தினர்  என தைக்கக் கொடுக்க வரும் யாவர்க்கும் உடனே மனம் நெருங்கிய உணர்வை ஏற்படுத்தி விடும், அதுவே அச்சத்தால் அவள் அம்மாவிற்கு பிடிக்காமல் போனது.

" சும்மா வர போறவங்கட்ட லாம்  ஊர்கதையெல்லாம் போறனி பேசிட்டு இருக்காத" என்பதே துளசி அடிக்கடி கேட்டு அலுத்து போன வசனமாகும்.

இதுபோல் ஊர்கதைகளை ஊருக்கு வரும்போதெல்லாம் துளசியிடம் இருந்து தெரிந்து கொள்வதால் மளிகை கருப்பசாமி கதையும் துளசிக்கு தெரிந்திருக்கும் என நினைத்தால்..


துளசி வீட்டிற்கு சென்று வீட்டில் வருகையைப் பதிவு செய்து, வழக்கமான விசாரிப்புகளையும் மறுமொழிகள் என முடித்து விட்டு, அங்கு கொடுத்த மோரைக் குடித்துக் கொண்டிருந்தாள்.

"சரி கயலு இருங்க, இத டீச்சருட்ட போய் குடுத்துட்டு வந்துறேன்,வரகுள்ள போயிறாத, பேசிட்டு இருங்க சாப்டுதா போணும்" என்று மஞ்சபையில் இரண்டு மூன்று கைசட்டைகளை வைத்துக்கொண்டு கிளம்பினார்.

"எய்! துளசி, எங்க அம்மாட்ட பேசுன ஒடனே உன்ன தா நினச்சேன், உனக்கு தா யார் வீட்ல என்ன நடந்தாலும் தெரிஞ்சுரம்ல" என்று முழுவதையும் சொல்லப் போகிறாள் என பரபரப்பாகக் கேட்டாள்.

எப்பயும் எதாவது நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்கும் முன் துளசியிடம் இருக்கும் இயல்பு அன்று தென்படவில்லை அவள் முகத்தில்: மாறாக கவலை தோற்றிருந்தது.
இருப்பினும், அடுத்த நொடியில் துளசியிடமிருந்து

"எத பத்தி பேசுற? "

"மளிகை கருப்பசாமி பத்தி தான், எங்கம்மா என்னன்னமோ சொல்றாங்க, அதான் ஓன்டா கேட்கணும் நெனச்சேன்"

"என்ன சொன்னாங்க" என அமைதிகுரலில்,

"என்னடி! உனக்கு தெரியுமம்னு ஓன்ட வந்தா, நீ என்னய கேக்குற, எதோ சாமியாரு செய்வினை ன்னு அப்டி இப்டி ன்னு கதைய விட்டுட்டுருந்தாங்க,
ம்ம் சரி அவங்களுக்கு அத பத்தி தெரில போல ன்னு விட்டுடேன்
ஆனா உனக்கே தெரில ன்னு சொல்லும் போது தா, எனக்கு ரெம்ப ஆச்சரியம்மா இருக்கு " என்று இழுத்தாள்..

துளசியிடமிருந்து பதில் வரவில்லை. சிறிது நேரம் மௌனம் அந்த இடத்தை ஆக்கிரமித்திருந்தது.

தரையைப் பார்த்துக் கொண்டிருந்த துளசியின் முகத்தைத் தன் பக்கம் திருப்பி
"எய் ஏன்டி அழுவுற? என்னடியாச்சு " என்ற கேள்வியை முடிக்கும் முன் கண்ணில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் பெருவெள்ளமென கொட்டத் தொடங்கியது.

நடப்பது என்னவென்று புரியாமல் துளசியைத் தோளில் சாய்த்துக்கொண்டு
"அழுவதடா என்னன்னு சொல்ற, சொன்னா தான தெரியும் " என்று தானும் தன் அழுகையை அடக்கிக்கொண்டே கேட்டாள்.

தன்னிலே அடக்கி வைத்திருந்து தன்னை விடுத்து பிறருக்குத் தெரிவிக்காமல் முதன்முறை சொல்ல முனையும் போது சொற்கள் வெளி வரத் திணறின.

தண்ணீரைக் குடித்து சற்று அழுகையை ஆற்றுபடுத்திய பிற்பாடு,

இரண்டு மாதங்களுக்கு முன் அந்த நாளில்  நடந்ததைச் சொல்கிறாள்.

துளசியின் அம்மாக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அன்றைய வேலைகள் அனைத்தையும் துளசியே செய்து வந்தாள்.
காய்ச்சல் மாத்திரை எடுத்துக்கொண்டதால் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தார். சமையலுக்குத் தேவையானதை வாங்க துளசி கிளம்பினாள்.

ஞாயிறு என்பதால் எல்லா கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும். மளிகை கருப்பசாமி கடை மட்டும் அன்றும் இருக்கும்: அங்கு வேலை செய்யும் ஆட்களுக்கு மட்டும் விடுப்பு கொடுத்து விடுவார். அவர் மட்டுமே கடையை மாலை ஆறு மணி வரை  திறந்து வைத்து இருப்பார். 


அந்த கடையில் முகப்பில்  இருபுறமும் காய்கறிகளும், அதை அடுத்து உள்புகுந்தால் மளிகைப் பொருட்களுமிருக்குமிடமும் இருக்கும். உள்ளே அதற்கருகிலே கருப்பசாமி அம்ரும் பணம் பெறும்  நாற்காலி இருக்கும். காய்கறி வாங்குமிடத்தில் வேலை செய்யும் ஆட்களிருந்து கணக்கு பார்த்து சிட்டையில் எழுதி உள்ளே சென்று பணம் செலுத்துவது போல் அமைப்பிருக்கும்.


பணம் பெறுமிடத்தில் துளசி தன் கையை அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தாள்

"ஏ நா சொல்றத கேளு, யாருக்கும் தெரியாது" என்றவுடன் கண்ணில் அனல் கொப்பளிக்க

 "த்தூ.. கையை விடுடா.."

 என தன் மொத்த பலத்தைப் பயன்படுத்தியது போல் வெடுக்கென பிடியிலிருந்து உதறிவிட்டாள். அவள் உதறிய நொடி, அவன் பிடி இந்த முறை  துப்பட்டாவின் முனையில் இருந்தது.

கண்ணிலிருந்த அனல் எரிமலையாய் வெடித்து வெப்ப நீர்குழம்பு பீறிட்டு வந்த நொடி, அவள் செருப்பு அவன் கன்னத்தைச் சிவக்க பதம் பார்த்தது; அடங்கி போய் விடும் என்று நினைத்தவன்  கையிலிருந்து துப்பட்டா விடுபட்டிருந்தது, மூன்றாவது அடி விழுந்த கணம், கருப்பசாமி உள்ளே வந்திருந்தார்..


அந்த காட்சியைப் பார்த்துப் பதறி,

"டேய்! பாவி என்னடா பண்ணா " என  கோவத்தின் வெதும்பலுடன் அடிக்கத் தொடங்கினார்.

"ப்பா! ஒன்னும் பண்ணலபா கையதான் பிடிச்சே" என்று அடி வாங்கிகொண்டு உறுதியான குரலில் பதில் தருகிறான்..

 "நீ திருந்தவே மாட்டியா? ஏன்டா நீயெல்லாம் உசுரோட இருக்க, செத்து போ" என மதன் தலையைச் சுவற்றில் இரண்டு முறை மோதச் செய்தார்..

கருப்பசாமியின் மகனான மதன்தனியார் மருத்துவக் கல்லூரியில்ய ஐந்தாம் ஆண்டு படித்து வருபவன்.  மதன், கயல், துளசி யுடன் பத்தாம் வகுப்பு வரை படித்தான்; ஒழுங்கீன செயலால் மாற்றுச் சான்றிதழ் தரப்பட்டு வெளியூரில் வேற பள்ளியில் சேர்க்கப்பட்டு அங்கு தங்கி படித்து வந்தான். கல்லூரியிலும் அவன் செயல்கள் மாறவில்லை. உடன் பயிலும் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று  கருப்பசாமி வரவழைக்கப்பட்டு இது இரண்டாவது முறை இனிமேல் இவன் மீது புகார் வந்தால் நீக்கம் செய்து விடுவோம் என சொல்லித் தான் இரண்டு மாத இடைக்கால நீக்கம் செய்யபட்டு ஊருக்கு வந்திருக்கிறான். வீட்டை விட்டு எங்கும் போகக் கூடாது என்று கருப்பசாமி சொன்ன போது அவர் மனைவி உங்களுடன் கடைக்கும் வரட்டும்  வீட்டில் மட்டும் அடைந்திருப்பதற்கு பதிலாக என்று சொன்னதால் கடையிலமர விட்டிருந்தார்..  

துளசி அவ்வப்போது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் போது ஒரு நாளில் பார்க்கையில் மதன்  உடன் படித்தவன் என்ற மட்டத்திலே பேசினாள். அவன் விடுமுறையில் வந்திருப்பதாக சொல்லிக்கொண்டான். அடுத்து எப்போதாவது கடைக்கு வரும்போது வலிந்து பேச்சுக் கொடுப்பான்: அவன் குணத்தை உணர்ந்து கொண்டவள் அவன் பேசத் தொடங்கியதுமே அதை முடிக்கும்படி பேசி அங்கிருந்து சென்றிடுவாள். 


கருப்பசாமி அவனை அடித்துக் கொண்டிருந்த போது அழுகைத் துடைத்துக் கொண்டு அங்கிருந்து நகரத் தொடங்கினாள் துளசி.

நகர்வதைக் கண்ட கருப்பசாமி  என்ன செய்வதென்றறியாமல் அடுத்த நொடி அவள் காலில் விழுந்து

"ம்மா! மன்னிச்சுருமா  அய்யோ ! அந்த பாவி தப்பு பண்ணிடான், கால விழுந்து மன்னிப்பு கேள்றா" என அவனையும் விழச் செய்தார்.. 
"வெளில மட்டும்சொல்லிறாதமா, என் மானம், மாரியாத லாம் போயிருமா"

என்று மெல்லிய குரலில் அவளை விடுத்து வெளியே கேக்காதபடி  அழுது கெஞ்சுகிறார்.

அவர் செயலை எதிர்பார்க்காதவள், தன் மனதில் உயர்ந்த நிலையில் வைத்திருந்தவர் பிம்பம் நொடியில் சுக்கு நூறாகா உடைந்த பின்பு, இதைச் சொல்லி விட்டே நகர வேண்டும் என  எண்ணுகிறாள்..

 "மானம்மரியாத லாம் வெளில உள்ளவங்க சம்பந்தபட்டது இல்ல, அதலாம்  உள்ள அறம் மனசாட்சி சம்பந்தபட்டது, உங்க பிள்ளை தப்ப மறைக்கனும் ன்னு நினச்சப்பயே அதலெல்லாம் உங்கிட்டு இருந்து போச்சு, இப்ப நீங்க ஒரு மதிப்புமில்லாத செல்லாக் காசு தா, ஆனா இத நா வெளிய சொல்ல போறதில்லஉங்க பையன மனுசமனா மாத்துங்க"
என்று சொற்களால் வெடித்து விட்டு அங்கிருந்து மின்னலென சென்று விட்டாள்.. 

நடந்ததைச் சொல்லி முடித்ததும் கட்டிப் பிடித்து அழுகத் தொடங்கி விட்டாள் கயல். துளசியும் இறுக்கமான தனது மனது சற்று கனம் குறைந்ததாக உனணர்ந்தாள்.


துளசி சொன்ன சொற்கள் மட்டும் கருப்பசாமி ஒவ்வொரு நாளும் காதிற்கு திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தது. தனக்குத் தண்டனையைத் தானே கொடுக்க நினைக்கிறார். அந்த ஊரிலிருந்து வெளியூருந்து குடும்பத்துடன் குடிபெயர்ந்து செல்கிறார்.

மதன் துளசியின் சொற்களிலிருந்த வீரியத்தைத் தன் தந்தை சொந்த ஊரை விட்டு வேறு ஊருக்கு செல்ல முடிவெடுத்த பின்பே உணர்கிறான்: வெளியூர் சென்ற பின்பும் பலமுறை திருந்தியதைச் சொல்லி மன்றாடிய போதும்  அவர் இறுதி வரை மதனிடம் பேசாதிருந்து விட்டார்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல்.

கலைஞர் மு.கருணாநிதி உரை: 
பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்.

Comments

  1. Super da...semmma .... Andha tulasi vaarthai semmaya irundhuchu

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...