Skip to main content

"சுடலை மாடா"



காலை 9.45 மணிக்கு இனியன் அந்த இடத்தை அடைகிறான். வாசலில் சிலர் குழுவாகும், சிலர் இருவராகவும் நின்று தான் படித்ததைச் சொல்லிக்கொண்டும், பிறர் படித்ததை "அதெல்லாம் கேக்க மாட்டாய்ங்கடா... இதைத்தான் கேப்பாய்ங்க..." ன்னு பேசிக்கொண்டும், இன்னும் சிலர் தனியாக நின்று தன் கையில் இருந்த புத்தகத்தை முன்னும் பின்னும் புரட்டிக்கொண்டிருந்தனர்..

"மாப்ள படிக்கவே இல்லடா, புக்க எடுத்து இரண்டு பக்கங் கூட பாக்கல, அதுக்குள்ள தூங்கிட்டேன் டா" என்று சிலர் புளுகிக்கொண்டும்,
"போடா! இந்த நாய் இப்படி தான் சொல்லுவான்; ஆனா எல்லா பேப்பரையும் க்ளீயர் பண்ணிருவான், இவன் ஒரு புளுகு மூட்டை டா , இவன் கெடக்கான்டா..." என்று திட்டிக்கொண்டும் இருந்தனர். அனைவரின்  கண்களில் பரபரப்பு மட்டும் குறையாமல் நிறைந்திருந்தது...

அவர்களில் சிலர் பேச்சுகளில் சில தயக்கங்களும், சிலர் பேச்சுகளில் ஆரவாரமும் இருந்தது... சிலர் யாரிடமும் பேசாமல் உள்ளே போய் என்ன செய்வது என்றும் தெரியாமல் ஒருவித பயம் கலந்த முகத்தோற்றத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

அதில் ஒருவனாக தானும் சேர்ந்து கொண்டான் இனியன்... ஆனால் அவனுக்கு இன்று 'பொறியியல் கணிதம்-3' (M3) என்றும், அதற்குத் தான் வந்திருக்கிறோம் என்றும்  தெரிந்திருந்தது..

'அது மட்டுமே தெரிந்தது...'

9.50 மணிக்கு அந்த தேர்வு அறைக்குள் நுழைந்தனர் அனைவரும்... விடைத்தாளில் தேர்வு எண், பாடம் இதெல்லாம் எழுதிவிட்டு, ஒன்றும் தெரியாமல் கனத்த மனதுடன் அமர்ந்திருந்தான் இனியன்..

10 மணிக்கு மணி அடித்தவுடன் வினாத்தாளை கொடுக்கத் தொடங்கினார் தேர்வு கண்காணிப்பாளர்... அனைவரும் எழுந்து, வினாத்தாள் வாங்கி அந்த ஒரு நொடி வேண்டுதலைச் செய்து பின் அமர்ந்து வினாத்தாளில் அவர்கள் பார்த்த கணக்குகள் உள்ளதா என்று தேடத் தொடங்கினர்.

இனியனும் வினாத்தாளை வேண்டிக்கொண்டே வாங்கிக்கொண்டான்... என்ன வேண்டினான் என்று அவனுக்கே தெரியாது, அந்த வேண்டுதல் அவனுக்கு பழகிய ஒன்றாகி இருந்தது... பிறர் அனைவரும் தேர்வுக்குள் மூழ்கி விட்டனர்...

இனியனுக்கு வினாத்தாளை முழுதும் இரண்டு முறை படித்து விட்டான்... அவன் வகுப்பில் அரையும் குறையுமுமாக கவனித்த ஒரு சில கணக்குகள் மட்டுமே தென்பட்டது... சரி அதையாவது எழுதி வைப்போம் என்று முற்பட்டான்..

வினா எண்ணை எழுதி, கொடுத்த தரவையும் எழுதி விடுகிறான். ஆனால் அவனுக்கு அடுத்து எப்படி தொடங்குவது? என்ன முறை? என்பது ஒன்றும் நினைவுக்கு வர வில்லை.. இவ்வாறே அவனுக்குத் தெரியும் என்ற நினைத்த எல்லா கணக்குகளும் ஆனது..

அவன் நினைவுகளில் இளையராஜா பாடல்களும், யூடுப்பில் பார்த்த சில காணொளிகளுமே நிரப்பிக்கொண்டிருக்க, ஒவ்வொரு பக்கங்களில் வினா எண், கொடுக்கப்பட்ட தரவு மற்றும் அந்த பக்கத்தின் மீதியை காலி இடங்களே நிரப்பி கொண்டிருந்தது..

இதற்கிடையில் அவன் அக்கம் பக்கத்தினரைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்காணிப்பாளர் இரண்டு முறை பார்த்து விட்டதால் இந்த முறை அவர்களைப் பார்க்காமல்  அவன் கைகடிகாரத்தைப் பார்த்தான்..

12 என்ற ரோமன் எண்ணை நேரம்,நிமிடம் ஆகிய இரு முள்களும் தொட்டுக் கொண்டிருந்தன..இதைக் காணும் போது அவன் பதட்டம் நொடி முள்ளை விட வேகமாக அதிகரித்துக் கொண்டிருந்தது... உடலில் உள்ள அனைத்து நீரும் வெளியேறி விடும் என்ற அளவுக்கு வேர்த்துக் கொட்டியது...

அவன் மன படபடப்பு அவன் தலைக்குள்ளே பூமி சுற்றுவதை உணர்ந்தவன் ஆனான். இது அவனை மயக்கத்திற்கு அழைத்துச் செல்வதாக நினைத்தான்..

"டைம் முடிஞ்சது, பேப்பரைக் குடு" என்று யாரோ தூரத்தில் சொல்வதாக அவன் காதுகளில் கேட்டது...

"பேப்பரைக் குடுக்கிறீயா?, இல்ல நா கெளம்புட்டுமா" என்று கனத்த குரல் அவனுக்கு வலப்பக்கம் அருகில் இருந்து வருவதை அறிந்து நினைவு கொள்கிறான்..

அவன் முன் இருந்த விடைத்தாளை அந்த கண்காணிப்பாளர் எடுத்துகொண்டார்..
அதில் முன் பக்கத்தில் பக்கங்களில் எண்ணிக்கை என்ற கட்டம் காலியாக இருந்ததால்

"இந்தா பேஜ் நம்பர யார் ஃபில் பண்ணுவா? சீக்கிரம் ஃபில் பண்ணி குடு" என்று விடைத்தாளை அவன் கையில் கொடுத்து விட்டார்..

அவனும் அவர் சொன்னதற்காக பக்கங்களை எண்ணுவது போல் விடைத்தாளைத் திருப்புகிறான்..அவன் காலியாக விட்டு விட்டு சென்றிருந்த பக்கங்களை நிரப்பிருந்தான் அவனுக்குத் தெரியாமலே... அதில் எழுதிருப்பது சரி தான என்று கூட அவனுக்குத் தெரியவில்லை..

இருந்தும் எழுதியிருந்த பக்கங்களை எண்ணி முதல் பக்கத்தில், அதற்கான கட்டத்தில் பூர்த்தி செய்து கண்காணிப்பாளரிடம் கொடுக்க முனைகிறான்..

அதற்குள் அவர் மற்ற அனைவரிடமும் இருந்து விடைத்தாள்களைப் பெற்று விட்டு, முன் இருக்கையில் அமர்ந்து, அவை சரியான வரிசையில் இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டிருந்தார்..

"சார், என் பேப்பர் சார்" என்று அவர் அருகே நின்று தனது விடைத்தாளை அவரிடம் நீட்டினான்..

"இரு!  கேட்ட ஒடனே கொடுக்க முடியாதா?" என்று கேள்வி கேட்டுக்கொண்டே அவர் வேலையைச் செய்து கொண்டிருந்தார்..

"இல்ல சார்...பேஜ் நம்பர் தா.." என்று தயங்கிய குரலில் சொன்னான்..

"குடு! " என்று வெடுக்கென்று வாங்கிக்கொண்டார்...

இனியன் அந்த அறையை விட்டு வெளிய வந்து,  வெளியே வைத்திருந்த தனது M3 புத்தகத்தை எடுத்து, பதட்டங்களைப் போக்கிக் கொள்ள சற்று அமருகிறான்..ஆனால் அவனுக்கு உள்ளே நடந்தது என்னவென்று அறியவே மூளை தயாரானது..

அவன் அந்த விடைத்தாளில் 2 மதிப்பெண் வினாக்களில் ஆறு மற்றும் 16 மதிப்பெண் வினாக்களில் நான்கும் எழுதியிருந்தான்... அவை மட்டும் சரியாக இருப்பின்;அவன் தேர்ச்சியே பெற முடியாது என்று எண்ணியிருந்த பாடத்தில் தேர்ச்சி பெற்றுவிடுவான்..

ஆனால் அவன் மதிப்பெண்களைப் பற்றி எண்ணவில்லை..அந்த ஒரு மணி நேரத்தில், தான் என்ன தான் செய்தேன் என்பதே ஆயிரம் வினாக்கள் கோர்க்கப்பட்ட ஒரு வினாவாக இருந்தது..

"ஒரு வேள! சுடலையா இருக்குமோ? " யோசிக்கிறான்..
ஆமா அவனுக்கு அந்த ஒரு மணி நேரம் வந்தது, அவங்க குலசாமி; சுடலை மாட சாமி தான்..

இனியனோட அப்பா அவனுக்கு அடிக்கடி  சொல்வது நினைவு வந்தது..

"உன் இஷ்டத்துக்கு, நீ நினைக்கிறப்பலாம் வர மாட்டாரு! உனக்கு ஒரு ஆபத்து வந்தாலோ, நீ உன் சுயநிலையை இழக்கிறப்பா அவரே வந்துருவாரு,
அவர் வந்தபிறகும் உனக்கு மயக்கம் வந்த மாறி ஆயிரும், ஒன்னும் தெரியாது; அவர் போன பிற தா , உனக்கு நினவு வரும்; ஆனா அவரு என்ன பண்ணாருன்னும் உனக்குத் தெரியாது"

அவங்க அப்பா இதை இனியன் டா அடிக்கடி சொல்றதுக்கும் ஒரு காரணம் இருக்கு... அது கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி இறந்து போன இனியனோட பெரியப்பா 'சுடலை'... அவங்க குலசாமி பேர தான் இனியன் தாத்தா, அவங்க பையனுக்கு வச்சுருந்தாரு..

பேரு வச்ச பொருத்தமோ ,என்னவோ அவருக்கு சின்ன வயசுல இருந்தே சாமி வரும்; அதும் சுடலை மாடசாமி மட்டும் தான் வருவாரு... வந்து ஆடிட்டு குறி சொல்லிட்டு சாமி மலையேறிரும்..

அப்படி ஒரு முறை அவங்க எல்லாரும் குடும்பத்தோட குலசாமி கோயிலுக்கு போயிருக்கும் போது, இனியனோட பெரியப்பா க்கு சுடலை வந்து, இனியனைக் கிட்ட வரச்சொல்லி,

சாமி சிரிப்போட... " நீ... ஏன் பிள்ளைடா... உன்னை நா கை விடமாட்டேன்... ஒன் கூடயே தான்டா இருப்பேன்...!" என்று சொல்லிக்கொண்டே இனியனுக்கு திருநீறு பூசி விட்டு மலையேறி விட்டது சுடலை...

அது தான் அவருக்கு கடைசி சாமி வந்தது... அதற்கு அடுத்து கொஞ்ச மாசத்துலேயே அவர் இறந்து விடுகிறார்..

இதற்கு அடுத்தே குடும்பத்தினர் பலரும் சொல்ல ஆரம்பித்தனர்... நம்ம குலசாமி இனி இனியன் மூலமா தான் வந்து நம்மைக் காப்பார் என்று... இவைகளே இனியனையும் ஒரு முடிவு எடுக்க செய்தது.

தேர்வறையின் உள்ளே நடந்ததை அறிந்த பின்னரே மூளை சற்று அமைதியானதை உணர்ந்தான்... இனியனும் தெளிந்தான் தனக்கு வந்தது அந்த  சுடலை மாடசாமி தான் என்று... அவரை எண்ணி மனமுருகி வேண்டி மெய்சிலிர்த்தான்.

இனியன் தேர்வறைக்கு வெளியில் அமர்ந்து, உள்ளே நடந்ததைப் பற்றி சிந்திக்கத் தொடங்கும் போது ,அவன் கையில் வைத்திருந்த அந்த M3 புத்தகத்தை ஒருவர் எடுத்தவுடன் கண் விழித்தான்...

"டேய் இனியா! என்னடா? இன்னைக்கும் படிக்குறேன்னு சொல்லிட்டு தூங்கிட்டு இருக்க? இன்னைக்காச்சும் ஒழுங்கா எழுதி பாஸ் ஆகுடா; காலேஜ் முடிச்சு 2 வருசம் ஆச்சு!.. ம்ம்ம்..."
               
                                            -இராசை இராம்
           

                       

Comments

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...