Skip to main content

"செலவு"



"ச்சை! நானும் பாத்துட்டு இருக்கேன்..எப்ப பாரு, சாப்பாடு வச்சுட்டு வச்சுட்டு அத வாங்கணும், இத வாங்கணும் ன்னு, எதையாது சொல்லிட்டே இருக்க? அதும் நீ எப்பயும் வைக்கிற இந்த கல்லு இட்லியைக் கொடுத்துட்டு" என்று அமுதன் இரண்டு மூன்று சொற்களைத் தூக்கி எறிந்தான்; குமுதாவிடம் இருந்து வந்து கொண்டிருந்த தொடர் பேச்சை நிறுத்துவதற்கு..

"ஆங், நா என்னமோ எனக்கு சேலை,  நெக்லஸ் கேட்ட மாறி என்ன ஏன் கடிக்கிறீங்க?" என்று அவள் விருப்பத்தையும் அள்ளி போட்டுக்கொண்டு, 
"கவினுக்கு தா கேக்குறேன்; அவன் தா பக்கத்து வீட்டு எழில் வச்சிருக்குற சைக்கிள் மாதிரி இவனுக்கும் வேணும் ன்னு கேட்டு அடம் பிடிக்குறான்"

"சைக்கிளா? இவனுக்கு தா நாம போன வாரம் சரவண ஸ்டார் ல வாங்கி குடுத்தோம்ல! பின்ன என்ன சைக்கிளு? 
"
"ஏங்க! அதுல ஜோட்ட பீம் படம் இல்ல..எழில் சைக்கிள இருக்கு, அத பாத்து தா கேக்குறான்"

"நீ தான்டி இவனை டிவி, போனு ன்னு கொடுத்து கெடுத்து வச்சிருக்க!" என்று குரலை உயர்த்தினான்..

"ஆ, எல்லாத்துக்கும் என்னையே குத்தம் சொல்லுங்க, உங்கள பாத்து தான் இவன் இப்டி இருக்கான்..நீங்க தா வந்த ஒடனே டிவி போட்டு உக்காந்துறீங்க, இல்ல போன எடுத்து உக்காந்துறீங்க, அவனையும் பக்கத்துல உக்கார வச்சுக்கிறீங்க..அதே தான் நீங்க ஆபீஸ் போன பிறவும் கேக்குறான்...விடலேன, கத்தி கூப்பாடு போட்டுறான்..நா என்ன செய்ய? " என்று பொதுபொது வென பொறிஞ்சி விட்டாள்..

"அவங்க வீட்ல இருக்குறத எல்லாம் வாங்க முடியுமா? அவர் அவங்க ஆபீஸ் ல மேனஜர் போஸ்ட் ல இருக்குறாரு, நான் அப்டியா? நீ கவினை அவங்க வீட்லயே எதுக்கு அடிக்கடி விடுறா? அங்க போறதால தா அங்க உள்ளதை இவனும் கேக்குறான்"  என்று அவள் கேட்டதுக்குப் பதில் சொல்லாமல், அவளை மடக்குவதாக எண்ணி திருப்பி அவளை வேறொரு கேள்வி கேட்டான்..

இந்த கேள்வியைத் தான்  எதிர்பார்த்து இருந்தவளாக, அடுத்த நொடியிலே "நா மட்டும் என்ன ரோபோ வ? எப்பயும் வேல செஞ்சிக்கிட்டே இருக்க.. எனக்கும்..." என்று சொல்லிக் கொண்டிருந்தவளை இடைமறித்து..

"நான் என்ன கேட்டேன்? நீ என்ன சொல்ற? அப்ப குழந்தையைப் பாக்கிறத ஒரு வேலையா சொல்றீயா? "

"ஏங்க! சொல்ல வரத புரிஞ்சுக்கவே மாட்டீங்களா, என்னயும் முழுசா சொல்ல விட மாட்டுக்கீங்க? தினமும் இப்டி தா நீங்களா பேசிட்டு இருக்கீங்க, நா நீங்க கேட்டதுக்குப் பதில் எதும் சொல்ல வந்தாலும் கேக்காம, பாதிலயே எந்திச்சு போயிருங்க..கொஞ்சம் சொல்றத கே..."என்று சொல்ல வந்ததை சொல்லத் தொடங்குவற்கு முன்னமே, அவன் சாப்பிடாமல் பாதியில் வழக்கம் போல் எழுந்து வேலைக்குச் சென்றான்..

அமுதன் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் வேலைக்குச் செல்ல தொடர்வண்டியே பயன்படுத்தி வந்தான்..
அது அமுதனுக்கு நேரத்தை அதிகப்படுத்தினாலும் செலவைக் குறைத்ததால் இருசக்கர வண்டி கூட வாங்கியதில்லை.. அந்த பணத்தை வைத்து வீட்டுக்கு தேவையானது வேறேதும் வாங்கலாம் என்பதால்..
வார இறுதி இரண்டு நாட்களிலும் ஓய்வு, பொழுதுபோக்கு என்று கழிக்காமல் அன்றும் மடிகணினியை எடுத்து பணிபுரிய அமர்ந்து விடுவான்..

இவையாவையுமே நினைத்துக்கொண்டே அன்றைய அலுவல் பணியை ஏதோ முடித்து விட்டு மாலையில் வீடு திரும்ப, தொடர்வண்டியில் ஏறி சாளரம் ஓர இருக்கையில் அமர்ந்தான்.. 

முகத்தைத் தழுவும் குளிர்காற்றையும், நொடியில் பின்னோக்கி சென்றுகொண்டிருக்கும் இயற்கை காட்சியையும் அனுபவிக்கும் சாளர ஓர அரியாசனத்தில் அமர்ந்தும் அதை உணர முடியா வண்ணம் அவன் மனக்குமுறல்கள் அவனைக் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தன..

வீட்டுக்கு எவ்வளவு பணம் செலவு பண்ணியும் எதாது பிரச்சினை வந்த வண்ணமாக தான் இருக்கிறது.. இவ்வளவு பண்ணும் நமக்கு மன மகிழ்வு கூட வேண்டாம் சிறிது  மன நிம்மதி மட்டுமாவது இருக்குமென்றால் அதுவும் இல்லை என்று வெறுப்பு, கடுப்பு இன்னும் பிற இதே பொருள் மற்றும் இதைச் சார்ந்த பொருள் கொண்ட சொற்கள் என அனைத்தும் சேர்ந்து வந்து இருப்பது போன்ற மனநிலையில் அமர்ந்திருந்தான்..

இவ்வாறாகவும் இதற்கு எதிர்மறையாகவும் என பலதரப்பட்ட மனநிலையில் உள்ளவர்களையும் சமமாக சுமந்து சென்றுகொண்டிருந்தது அந்த தொடர்வண்டி..

அடுத்தொரு நிறுத்தத்தில் ஏறிய 8 பேர் கொண்ட குடும்பம்,  ஏறியவுடன் ஏறும்வழிக்கும் இருக்கைகளுக்கும் இடைப்பட்ட இடத்தில் கீழே அமர்ந்து கொண்டனர்..கைகளில் வைத்திருந்த  வளையல், பாசிகள் கொண்ட கூடையை ஓரமாக வைத்து விட்டு பாட்டு ஆட்டம் என அமர்ந்த இடத்திலிருந்தே விளையாடத் தொடங்கி விட்டனர்..

அந்த குடும்பத்திலிருந்த சிறுவர் சிறுமிகள் முதல் தாத்தா பாட்டி என அனைவரும் பேச்சுக்கள் பாட்டுகள் என பார்ப்பவர் யாவரும் பொறுமை இழந்து எரிச்சலாகும் வண்ணம் என்று இல்லாமல்  பொறாமை படும் வண்ணம் இருந்தது அவர்கள் மகிழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தது..

அவர்களைப் பார்த்து பொறாமை பட்டவர்களில் ஒருவனாக அமுதனும் தன் நினைவுகளை இழந்து மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான் அவன் நினைவுகளை அலசுகையில் இதுபோலொரு மகிழ்வான நிகழ்வு நடந்தது என்று ஏதுமில்லை.. காரணம்; வீட்டில் உள்ளவர்களுக்கு என அவன் நேரம் ஒதுக்கியது இல்லை.. தொலைக்காட்சிக்கும் கைபேசிக்கும் அதன் வழி கிடைத்த முகமறியா மனிதர்களுக்குமே நேரம் ஒதுக்கினான்..

அமுதனின் மனக்குமறல்களுக்கு அவன் கண்ட இந்த நிகழ்வு பதில் தந்ததை உணர்ந்தான்..

நாம் வீட்டிற்கு செலவு செய்ய வேண்டியது பணம் என்று மட்டும் எண்ணி இருந்தவனுக்கு செலவு செய்ய வேண்டியது; விலை மதிப்பில்லாததும் மற்றும் மகிழ்வை ஈட்ட வல்லதுமான 'நேரம்' தான்  என்ற உண்மையை உணர்ந்தான்..

வீட்டிற்கு வந்ததுமே கைபேசியை ஓரத்தில் கிடத்தி விட்டு ஓரத்தில் இருந்த கிரிக்கெட் பேட் பந்தை எடுத்து  கவினை அழைத்து விளையாடத் தொடங்கினான்..இதைப் பார்த்த குமுதாவும் அமுதனின் இந்த தீடீர் மாற்றத்தைத் தானும் சிறிது நேரத்தில் உணர்ந்து கொள்ள போவதை அறியாமல்,  திளைப்பில் நின்று பார்த்துக்கொண்டிருந்தாள்..

                                           -இராசை இராம்

Comments

  1. உண்மைதான் இராம்! கைப்பேசியும் பிற தொழில்நுட்ப கருவிகளும் மனிதர்களின் இடத்தைப் பிடித்துக் கொண்டன. செலவு - சரியான தலைப்பு! நான் ஏதோ பணச் செலவு என்று நினைத்திருந்தேன்! அருமை!

    ReplyDelete
  2. செம ராம்..keep your going..all the best

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...