Skip to main content

ஏன்? உங்க மனசுக்குத் தெரியாது?

எப்போதும் போல் இல்லாமல் இந்த ஆண்டு திருவிழாவுக்கு விடுமுறை கிடைத்த மகிழ்ச்சியில் ஊருக்கு வந்து சேர்ந்திருந்தேன். வீட்டிற்கு வந்து, சிறு தூக்கம் கொண்டு, பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு, சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி, காலை உணவையெல்லாம் முடித்து விட்டு ஊர்க்காரியாக மாறியிருந்தேன். மகள் வந்திருக்கிறேன் என்று எனக்குப் பிடித்ததைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம், "அம்மா! சிறுகிழங்கு, கேரட் பொரியல் தான சரியா?" என்று மாதுளைச் சாறைக் குடித்து முடித்து விட்டு, சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடியே கேட்டேன்.

"ஆமா, அதுவும் தான்" எனக் கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறு புன்னகையுடன் வந்தது பதில்.

"சரிமா, வீட்டுக்கு வர வழில பாத்தேன், திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர்ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!"

கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர்; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நிறைந்த சிவப்பற்று கொண்டவர். சிவராத்திரி அன்று நடக்கும் கலைநிகழ்ச்சியின் முழுத் தொகையும் அவரே கொடுப்பார். 

மிகுந்த ஊர்ப்பற்றும் கொண்டவர். 'வெளியூர்களுக்குச் சென்றாலும் சொந்த ஊரில் தான் சாகும் வரை இருக்க வேண்டும், வெளியூருக்குக் குடிபெயர்ந்து போவது தன் உயிரை விடுவது போலாகும்' என வாழ்ந்த தன் தந்தைச் சொல் கேட்டு வளர்ந்ததால் தானும் அதையே கடைபிடித்து வெளியூர்களுக்குப் படிக்க, பணிக்குச் செல்லும் பிறரிடமும், 'போங்க, படிங்க, வேலை பாருங்க, ஆனா, திரும்பிச் சொந்த ஊருக்கே வந்துடணும்யா' என அறிவுரையும் சொல்லுவார்.

நகர்மன்ற உறுப்பினராக நான்கு முறை இருந்தவர். தள்ளிப் போடப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த முறை உள்ளாட்சித் தேர்தல் நடந்தாலும் அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். எந்தக் கட்சியையும் சாராது எப்போதும் தனியாக  நின்று வெற்றி பெறுபவர். ஆனால், எல்லா கட்சியினரும் இவருடன் நல்ல  போக்கைக் கொண்டிருப்பார்கள். 
குறைந்த வட்டிக்குக் கடன் கொடுத்தும் வருபவர். உண்மையில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உள்ளவர்களிடம் அடிக்கடி கேட்பதுமில்லை. கடன் என்று சொல்வதைக் காட்டிலும் பண உதவி செய்பவர் என்றே சொல்லலாம். 

நான் அம்மாவிடம் கேட்ட கேள்விக்கு, வேலையைப் பார்த்துக் கொண்டே, "கயலு, அது சரியா என்னன்னு தெரிலமா! ஆனா, கொஞ்ச நாளா உடம்பு சரியில்லன்னு வெளில வராம இருந்தாங்க, வெளில வந்த கொஞ்ச நாளும் முகத்தல முன்ன இருந்த களை இல்ல, யார்ட்டயும் முகங்கொடுத்து பேசல, திடீர்ன்னு மறுபடியும் உடம்பு சரியில்லன்னு சொல்லி எல்லா கமிட்டில இருந்தும் அவரே விலகிட்டாராம், கடைலயும் வேல பாக்குற பசங்க மட்டும் கொஞ்ச நாள் கடயத் தொறந்துட்டு இருந்தாய்ங்க, அப்றம் கடயையும் வேற ஆளுக்கு வித்துட்டாங்க," என்றவள் கொஞ்சம் குரலைக் குறைத்து, "சாதகம் பாத்ததுல நேரம் சரியில்ல வெளிய தங்க சொன்னதா கொஞ்ச நாளா வெளியூர்ல தங்குனாங்க, அப்றம் ஒருநாள் வந்து வீட்டயே காலி பண்ணிட்டு போய்ட்டாங்க" என்றாள். 

சற்று இடைவெளிவிட்டு, "கூடயே சுத்துன பயலுகளும் எதும் பண்ண மாறித் தெரில, எல்லாவனும் நல்லா இருக்குற வர தான் வருவானுக, காலம் போன காலத்துல ஒருத்தனும் வரல, ஆனா அவங்க இங்க இருந்த இருப்புக்கு, எங்க போனாலும் நல்லா இருப்பாக. வெளியூருக்கு மாறப் போனவங்க ரெம்ப பேருக்கு அப்டி சொந்த ஊரை விட்டு போகக் கூடாதுன்னு அவங்களுக்கு உதவி பண்ணி இங்க இருக்க வச்சுருக்காரு, அவரே வெளியூர் போறாருன்னா அப்டி என்ன துயரமோ" என முழுக்கதையையும் முடித்து, பெருமூச்சு விட்டாள் அம்மா.

"ஏம்மா, காசு இருக்கு, பொறவு எங்க போனாலும் என்ன? அவங்களுக்கு இங்க இருந்த மாதிரி தான் இருக்க போறாங்க" என இயல்பாய் நான் சொல்ல, "பேரு, மதிப்புல்லாம் இங்க இருந்த மாதிரி வந்துருமா? யாரு எப்ப எங்க பாத்தாலும் வணக்கம் வைப்பாங்க, அவரும் எந்த தலக்கனமும் இல்லாம எவ்ளோ பணிவா நடந்துக்குவாரு, சரி அத விடு, நல்ல மனுசன் தான் அவருக்கு அப்டி நடக்கணும்னு விதில இருக்கு போல, ம்ம்ம்... நம்ம கைல என்ன இருக்கு?" என்ற அம்மா சற்று இடைவெளி விட்டு, "சரி, நீ பூக்குழி வர இங்க இருப்ப தான?" என்று நீண்ட உரையாடலின் தடத்தை மாற்றினார்.

"என்னம்மா! சும்மா விடுன்னு சொல்ற? அவரு நமக்கும் எவ்ளோ உதவி பண்ணிருக்காரு. ஏன்? அவரு தான எனக்குக் கல்விக்கடன் வாங்க உதவி பண்ணது, இல்லேனா அந்த மேனேஜர் எத்ன நாள் அலைய விட்ருப்பான்" என அந்த நாட்களை ஒரு நொடி நினைத்துக் கண் வியப்புற்று கேட்டேன்.

"அதுக்கு என்னை என்ன பண்ண சொல்ற? ஆமா ஒங்கூட தங்கிருக்குற அந்த பிரியா கல்யாணம் அடுத்த மாசம் தான சொன்ன? நாங்களும் வரணும்ல?" என்று மீண்டும் அடுத்த தடத்திற்கு நகர்த்தினார்.

"சரி விடுங்க, நான் பூக்குழி வரலாம் இருக்க முடியாது, லீவு அவ்ளோ இல்ல, பிரியா கல்யாணத்துக்கு வேற லீவு எடுக்கணும், அதான் பூக்குழிக்கு முந்தன நாள் டிக்கெட் போட்ருக்கேன்." என்று சொன்ன நான், "நீ சமைச்சு வையி, அதுக்குள்ளே துளசி வீட்டுக்குப் போய்ட்டு வந்துடுறேன்" என்று ஊருக்கு வந்ததும் முதல் நாளிலே செல்வதை வழக்கமாக வைத்திருந்த என் தோழி வீட்டுக்குக் கிளம்பினேன்.

"சரி, போய்ட்டு வெரசா வந்துரு, வரும்போது துளசியும் கூட்டு வா, அவள மளிக கடைல அப்பப்ப பாக்குறது தா, வீட்டுக்கு நீ இல்லாம வரக்கூடாதுன்னு முடிவுல இருப்பா போல, அந்தா இந்தான்னு சொல்லி வர மாட்டா" என்று புன்முறுவலுடன் சொல்லி அனுப்பினார்.

நானும், துளசியும் பள்ளித் தோழிகள். துளசி கூட இருந்தா எப்பவும் மனசுக்குள்ளே சிரிப்பு ஓடிகிட்டே இருக்கும். எட்டாவது இறுதித்தேர்வு முடித்து விடுமுறையில் இருந்த போது, துளசியின் அப்பா இரண்டாவது மாரடைப்பில் இறந்து விட, துளசியின்  அம்மாவினால் தையல் வேலை செய்துதுளசியைப் பத்து வரை கடத்த முடிந்தது. அதற்கு மேல் படிக்க வைக்க  பணமும், மனமும் இல்லாததால் நிறுத்த நினைத்த துளசியின் படிப்பு மேலும் தொடர்ந்ததுக்குக் காரணமும் மளிகை கருப்பசாமி தான்.  ஆனால், பன்னிரண்டிற்கு மேல் அதுவும் முடியவில்லை. அதற்கு மேல் அவளும், அம்மாவுடனே தையலில் உதவி செய்து வந்தாள். பள்ளிக்கூடத்திலிருந்து இருந்து வந்த அந்த குறும்பு பேச்சு, வெகுளித்தனமும்கலகலப்பாகப் பெரியோரிடமும் வாதாடும் இயல்பு, அக்கம்பக்கத்தினர்  எனத் தைக்கக் கொடுக்க வரும் யாவர்க்கும் உடனே மனம் நெருங்கிய உணர்வை ஏற்படுத்தி விடும். ஆனால், துளசியின் அம்மா அடிக்கடி துளசியிடம், 'சும்மா போற வரவங்கட்டல்லாம்  ஊர்க்கதை பொறணி பேசிட்டு இருக்காத' என்று சொல்லுவாள். போன மார்கழி மாதம் தான் பட்டாளத்தில் இருக்கும் சரவணன் கூட நிச்சயம் ஆனது துளசிக்கு. 

'ஊர்ல என்ன நடந்தாலும், துளசிக்குத் தெரிஞ்சிருக்கும், கருப்பசாமி பத்தி தெரிஞ்சிருக்காதா?' என்று நினைத்துக் கொண்டே துளசியின் வீட்டினை அடைந்தேன்.
"ஏய், கயலு, எப்படிடி இருக்க எரும மாடு?" என்றாள் துளசி. சற்று நேரத்தில் வழக்கமான 'நல்லா இருக்கியா?' எல்லாம் முடிஞ்சு, என் கையில் மோர்க்குவளையைக் கொடுத்துட்டு, துளசியோட அம்மா, "சரி, கயலு பேசிட்டு இருத்தா, இத டீச்சருட்ட போய் குடுத்துட்டு வந்துறேன், வர்றக்குள்ள போயிறாத, சாப்டுதா போணும்" என்று மஞ்சப்பையில் இரண்டு மூன்று கைச்சட்டைகளை வைத்துக்கொண்டு கிளம்பினார். 

"ஏய், துளசி, எங்க அம்மாட்ட பேசுன ஒடனே உன்ன தா நினச்சேன், உனக்குத் தா யார் வீட்ல என்ன நடந்தாலும் தெரிஞ்சுரும்ல?" என்று கேட்டேன். 

"எதப் பத்தித் தெரியணும் ஒனக்கு?" என்று கேட்டாள் துளசி. 

"மளிகை கருப்பசாமி பத்தி தான், எங்கம்மா என்னன்னமோ சொல்றாங்க, அதான் ஒன்கிட்ட கேட்கணும்னு நெனச்சேன்"

"என்ன சொன்னாங்க?" என்றாள் அமைதியான குரலில். இது இயல்பான துளசி இல்லையே! 

"என்னடி! உனக்கு தெரியும்னு ஒன்கிட்ட வந்தா, நீ என்னய கேக்குற, சாதகம் பாத்தாங்க, நேரம் சரியில்லன்னு போயிட்டாங்கன்னாங்கம்ம், சரி அவங்களுக்கு அத பத்தி தெரில போலன்னு விட்டுடேன். ஆனா உனக்கே தெரிலன்னு சொல்லும் போது தான், எனக்கு ரெம்ப வியப்பாருக்கு" என்றேன்.

துளசியிடமிருந்து பதில் வரவில்லை. ஒலியில்லா அமைதி எங்களைச் சுற்றிப் பரவியிருந்தது.

தரையையே பார்த்துக் கொண்டிருந்த துளசியின் முகத்தை என் பக்கம் திருப்பினேன். 

"ஏய், ஏன்டி அழுவுற? என்னடியாச்சு?" என்ற கேள்வியை முடிக்கும் முன் கண்ணில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கண்ணீர் பெருவெள்ளமென கொட்டத் தொடங்கியது.

நடப்பது என்னவென்று புரியாமல் துளசியைத் தோளில் சாய்த்துக்கொண்டு "அழுவாதடி, என்னன்னு சொல்லுடி, சொன்னா தான தெரியும்?" என்று நானும் அழுகையை அடக்கிக் கொண்டே கேட்டேன்.

அவளுக்குள் அடக்கி வைத்திருந்த சொற்கள், பிறருக்கு இதுவரை தெரிவிக்கப்படாமல் இருந்து முதன்முறையாகச் சொல்ல முனையும் போதுவெளி வரத் திணறின.

அருகில் இருந்த தண்ணீரை எடுத்து அவளிடம் கொடுத்தேன். அழுகை கொஞ்சம் குறைந்து, அவள் பேசத் துவங்கியிருந்தாள்.

"ஒரு நாலு மாசம் இருக்கும், அம்மாக்கு மேனிக்குச் சரியில்லாமல் இருந்துச்சு, காய்ச்சலுக்கு மருந்து சாப்பிட்டு தூங்கிட்டுருந்துச்சு, வீட்டு வேலையெல்லாம் முடிச்சுட்டு, சமையலுக்குத் தேவையானதெல்லாம் வாங்கலாம்னு கடைக்குக் கிளம்புனேன். உனக்குத்தான் தெரியுமே, ஞாயித்துக்கிழமை நம்ம மளிகை கருப்பசாமி கடை மட்டும் தொறந்துருக்கும். வேலை செய்யுற  ஆளுங்களுக்கு மட்டும் லீவு வுட்டுட்டு அவர் மட்டுமே கடையை மாலை ஆறு மணி வரை  திறந்து வைத்து இருப்பார்ல. ஆனா, அன்னிக்கு நான் போறப்ப அவரு இல்ல. காய்கறிலாம் வாங்கிட்டு, கல்லாவுல இருந்தவன்கிட்ட காசு கொடுத்தா, காச வாங்காம என் கையப் புடிச்சான்." என்றவள் கண்கள் சிவந்திருந்தன. 

"யாருடி அவன்?" என்றேன். 

"மதன் தான், நம்ம கூட ஸ்கூல்ல படிச்ச மளிகை கடைக்காரரு பையன், எடுபட்ட பய, எப்ப போனாலும் என்கிட்ட பேசுவான், ஸ்கூல்ல ஒன்னா படிச்சதாலன்னு நெனச்சேன், ஆனாஅன்னிக்கு என் கையப் புடிச்சுகிட்டு, 'ஏ நான் சொல்றதக் கேளு, யாருக்கும் தெரியாது' ன்னான். வந்த கோவத்துக்கு, 'த்தூ, கைய வுடுடா, எடுபட்டவனே' ன்னு கைய உதறிவிட்டேன். கைய விட்டவன் துப்பட்டாவைப் புடிச்சு இழுத்தான். எடுத்தேன் செருப்பை, கன்னத்துலயே மாத்தி மாத்தி அடிக்குறப்ப, கருப்பசாமி வந்துட்டாரு." என்ற துளசி, கொஞ்சம் அமைதியாகி, 'எலேய், என்ன காரியம்டா செய்ய பாத்த' ன்னு கருப்பசாமி கேட்டாரு. அதுக்கு அந்த நாயி சொல்லுச்சு, 'சும்மா கையத்தான் புடிச்சே' ன்னு. 'எவ வந்தாலும் கையப்புடிச்சு இழுப்பியாடா, வெட்கங்கெட்டவனே' ன்னு செருப்பைக் கீழே போட்டேன். கருப்பசாமி அவனைப் பாத்து, 'ஏன்டா நீ திருந்தவே மாட்டியா? காலேசுல தான் ஒரண்ட இழுத்துட்டு வர்றன்னு கடையில உட்காரச்சொன்னா, இங்கனயும் தொடங்கிட்டியா?' ன்னு கேட்டுக்கிட்ட இருந்த பெரியவரைத் தாண்டி அழுகையத் தொடச்சுட்டு போனேன்."

"அப்புறம் என்ன ஆச்சு?"

"பெரியவரு என்ன நிக்கச் சொன்னாரு, அவரப் பாத்து திரும்புனா, என் காலுல வுழுந்து அழுவுறாரு, 'ம்மா, மன்னிச்சிரும்மா, இந்தப் பாவி தப்பு பண்ணிட்டான், டேய் நீயும் கால்ல வுழுடா!' ன்னு சொல்லி அவனையும் கால்ல வுழ வச்சாரு. இதக் கொஞ்சமும் எதிர்பாக்கல நானு. அப்ப ஒன்னு சொன்னாரு" என்ற துளசி கண்களைத் துடைத்துக் கொண்டு தொடர்ந்தாள். 

" 'யம்மா, வெளில சொல்லிடாதம்மா, எங்க மானமெல்லாம் போயிடும்' னாரு, பாரு, அழுவுறத நிறுத்திட்டு, 'அதெல்லாம் இருக்குறவகளுக்குத் தான் போவும். இவ்ளோ செஞ்சதுக்கு அப்புறமும் ஒன் மவனைக் காப்பாத்த என் காலுல வுழுறல்ல, அப்பவே ஒன் மானத்த ஒன் மவன் வாங்கிட்டான், நான் வெளில சொல்லல, முதல்ல அவன மனுசனா மாத்துங்க, ஊருக்குத் தெரிஞ்சு தான் உங்க மானம் போவுமாஏன்? உங்க மனசுக்குத் தெரியாது?' ன்னு கேட்டுட்டு வீட்ட நோக்கி நடந்து வந்துட்டேன். ஒரு மாசத்துல கருப்பசாமியும், அந்த எடுபட்ட நாயும் இந்த ஊரவிட்டே போயிட்டாங்க" என்று முடித்திருந்தாள்.

அவள் முகத்தையே உற்றுப் பார்த்திருந்த என் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்திருந்தது. இவ்வளவு நாள் மனத்துள் வைத்திருந்த சுமைகளை இறக்கி வைத்ததில் அமைதியாக இருந்தவளின் கைகளை ஆதரவாகப் பிடித்தேன். அவள் என்னைப் பார்த்தாள்மனதின் கனம் குறைந்ததில் துளசியின் முகத்தில் நிம்மதி நிறைந்திருந்தது.


குறள்:
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும் 
தேரான் பிறனில் புகல்.

உரை:
எவ்வளவு புகழ் உடையவராயினும் பிறர் மனை நோக்கிடுகையில் அவர் மதிப்பு ஒன்றுமில்லாமல் போகும்.


Comments

Post a Comment

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...