பெரியார் நிகழ்த்திச் சென்றுள்ள ஆக்கப்பூர்வமான புரட்சிகள், பெண்கள் இன்றும் என்றும் போற்றும் வண்ணம் சமூகத்தில் அவர் முன்வைத்து போராடி அவர்களுக்கு கொண்டு வந்த சீர்திருத்தங்களைப் பற்றிய கட்டுரை அல்ல. முதலில் இது கட்டுரையே அல்ல. பெரியாரைப் பற்றி நான் முன்வைக்கும் கருத்து. அவர் சொன்னதைப் போல் இதை ஏற்பதும் மறுப்பதும் உங்கள் புத்திக்குட்பட்டது.
பெரியார் எனும் கருத்தியல்:
பெரியாரைத் தலைவர் என்றளவில் நிறுத்தி விட நம்மால் முடியாது. தலைவர் என்றால் போற்றப்படுவார் (அ) மறுசாராரால் தூற்றப்படுவார்; இன்றளவும் கடைபிடிக்கவல்ல கொள்கையாகவும், பல கோணங்கள் உள்ள விவாதப் பொருளாகவும், தொலைநோக்கு பொதிந்த ஆராய்ச்சிக் கூறாகவும் இருந்து வரும் அவரரை ஒரு கருத்தியலாகவே பார்க்க வேண்டும். அப்படிறென்றால் விவாதப் பொருளாகும் யாவரும் கருத்தியல் தான எழும் கேள்விக்குப் பதில் அதன் பொருளடக்கத்திலே கிடைத்துவிடும்.
கருத்தியல் என்ன செய்யும்?
கருத்தியல் சமூகத்தின் மீதான பார்வையை நுண்ணோக்கச் செய்யும், உலகப் பார்வைக்கு நம்மை விசாலப்படுத்தும், நெறி சார்ந்த சிந்தனைகள் ஊடாகவும் மாற்றங்களை ஏற்படுத்தும், நம்பிக்கைகளின் மெய்யியலையும் பரிசீலனைக் கொள்ளச் செய்யும், எதன் மீதான எண்ணக்கருக்களையும் பகுத்தாய்ந்து ஏற்கச் செய்யும்.
கருத்தியலின் முதன்மை பண்பாய் அக்கருத்தை ஏற்கச் சொல்லிக் கட்டாயபடுத்தாது; விளக்கிச் சொல்லி உங்கள் முன்னிறுத்தி நின்றுவிடும். அந்த கேள்விக்கு பதில் இங்கே முடிந்து விடுகிறது.
பெரியார் வழிமொழிந்த கருத்துகள்:
கடவுள் மறுப்பு ஒன்று தான் பெரியாரின் கருத்து என ஒளிமறைக் கண்ணாடி அணிந்து கொண்டு உலகம் இருட்டெனச் சொல்லாது; உலகை மெய்யியல் வழி முழுமையாகக் காண்க.
பெரியார் பல கருத்துகளை புதிதாக முதன்முதலாக உருவாக்கிய போதும் வழி மொழிந்த கருத்துக்கள் எனக் குறிப்பிடுவதே பொருத்தமாய் இருக்கும். ஏனெனில் அவரின் முதன்மை நோக்கமாய் இருந்தது; வள்ளுவரும் புத்தரும் அறிவுறுத்திய ஒவ்வொர் உயிரையும் சமமாய்ப் பார்ப்பது, அவ்வெல்லா உயிர்க்கும் யாவும் சமமாய்க் கிடைக்கப் பெறுவதும், தன்னொழுக்கத்துடன் வாழ்வை மேற்கொள்வதும் போன்ற அறம் சார்ந்த சமத்துவ கருத்துகள் தான். உயிர்களிடத்தில் ஆதிக்கம் செலுத்துவதை முற்றிலுமாக எதிர்த்தார். ஒரு சாதி பிரிவினர் மற்றொரு சாதி பிரிவினரின் மீது செலுத்துவது மட்டும் ஆதிக்கம் என்று நின்றுவிடாது, பெண்கள் மீதான, தொழிலாளர்கள் மீதான என ஆதிக்கத்தை எல்லா வடிவிலும் எதிர்த்தார். எதிர்ப்பது என்றால் வாய்வழி நின்று விடுவது அல்ல. அதன் காரணக்கூறுகளை ஆராய்ந்து அதிலிருந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவதேயாகும்.
சமூகத்தில் சமத்துவம் நிலவ வேண்டுமென்பதே அவர் நிலைநிறுத்திய கருத்து. அதற்கு முட்டுகட்டையாக இருப்பது எதுவென பகுந்தாயும் போது தான் மதத்தின் பெயரால் நடந்த மூடநம்பிக்கைகளும் அதற்கு பக்கபலமாய் இருந்து வேத புராணங்கள் எனவறிந்த பின்பே அதை எதிர்த்து செயலாற்றத் தொடங்கினார்.
ஒரு சமூகம் முற்போக்கு பாதையில் பயணப்பட விரும்பினால் அவை அறிவியலைத் தன்னோடு எடுத்துச் செல்ல வேண்டும். அறிவியலை ஏற்காத கடவுள் பற்றை அடியோடு மறுத்தார்.
பெரியாரைக் கருத்தியல் என்பதற்குக் காரணம்:
ஒரு கருத்தைப் பிறர் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதற்காக அக்கருத்தில் மேற்பூச்சுகள் பூசி வலிந்து திணிப்பவர் மத்தியில் தன் கருத்தில் உள்ளதை உள்ளபடி தெளிவாக உரைக்கும்படியே கூறியுள்ளார். அவரின் இவ்வெளிப்படைத் தன்மை முற்போக்காளர்கள் சிலராலும் விமர்சிப்புக்குள்ளாகிறது; கருத்துகளை மென்மையாகச் சொல்லியிருக்கலாம் என்று. சில இடங்களில் தன் எதிர்ப்பை மென்மையாகச் சொல்லிச் சென்ற அண்ணல் அம்பேத்கர் கருத்தை புரட்டி அவரையே தன்னாளாக காட்ட முயன்று வருகிறார்கள். ஆனால் அது போலல்லாமல் இன்றளவும் எந்த சாயத்திற்குள்ளும் அகப்படாமல் ஒளிந்து எறியப்படும் சாயமும் அவர் அருகே செல்லமுடியாமல் தனித்துவமாய் விளங்குவதற்கு காரணமாக இருந்து வருவதும் அந்த கரடு முரடான வெளிப்படைதன்மை தான்.
அவ்வெளிப்படை தன்மை தான் அவரை, ஒரு குறிப்பிட்ட வகுப்பினர்க்கு எதிரானவர் எனப் பரப்பி வரும் நிலயிலும் அவ்வகுப்பினர்கள் பலராலும் அவர் எதிர்த்தது ஒரு வகுப்பினரை அல்ல. அங்கு சூழ்ந்து கிடக்கும் ஆதிக்கத்தைத் தான் எனப் புரிந்து ஏற்றுக்கொள்ளும்படியாகச் செய்திருக்கிறது.
சாதீயை ஒழித்துவிட்டாரா? பெண்கள் முன்னேறிடாங்களா?
சாதீ ஒழிப்பு என்பது இரண்டு புரியா மந்திரம் சொல்லி இல்லாத் தோசம் தீர்ந்தது என்று புரட்டும் ஏமாற்று காரியம் அல்ல. தலைமுறை தலைமுறையாய் மக்கள் தலையில் ஏற்றப்பட்ட உளவியல் சார்ந்த நச்சு. நாற்பது ஐம்பது ஆண்டுகளில் ஒழித்து விட கூடியது அல்ல. ஒழிக்கவே முடியாத ஒன்று எனலாம். பெண்களின் சமூக முன்னேற்றதிற்கு காரணங்களில் முதன்மையானவர் இவரே. இவர் வழி வந்த தலைவர்களே அதைச் சாத்தியப்படுதியுள்ளனர். இருப்பின்னும் சாதீ ஒழிப்பு, பெண் விடுதலை என்று சொல்லும் போதெல்லாம் பெரியாரைச் சொல்வது ஏன் என்றால் அவர் எழுதிய கட்டுரைகள், நிகழ்த்திய சொற்பொழிவுகள், எடுத்த முன்னெடுப்புகள், கொண்டு வந்த சீர்திருத்தங்கள் யாவும் மனிதர்கள் மனதில் பாகுபாடற்ற மனிதம் கொண்டு வர வழி செய்திருக்கிறது. இக்கருத்தியல் யாவரும் புரிந்துகொள்கையில் சாதீயெனும் ஆதிக்க மனப்பான்மை நீர்த்துப்போகும். சக மனிதனை மனிதனாக மட்டுமே பார்க்கும் அறவழி தலைத்தோங்கும். இன்றளவும் அவரின் தேவை இருப்பதை அன்றாடம் நிகழும் வன்கொடுமைகள் மூலம் காண்கிறேன். இப்போதுள்ள பாசிச அரசாங்கத்திற்கு எதிராக மட்டும் தேவைபடுபவர் அல்ல. மானுட வளர்ச்சி நோக்கும் எந்த சமூகத்திற்கும் பெரியார் எனும் கருத்தியல் தேவைப்படும்.
பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் அல்ல; அனைவரும் விமர்சனங்களுக்குட்பட்டவர்களே. ஆனால் மாற்றுகருத்து எங்கே எழுகிறதெனில்,
ஒரு கருத்தியலில் ஈடுபாடு இல்லையெனில் அதைத் தெரிந்து கொள்ளாது கடந்து சென்றுவிடலாம். ஆனால் ஒரு கருத்தியலைப் புறக்கணிக்கவோ (அ) எதிர்க்கவோ வேண்டுமென்றால் அதைப் பற்றி எல்லா கோணங்களிலும் தேடி அறிந்து கொள்தல் வேண்டும்.
ஒரு நூலின் இடையில் ஒரு பக்கத்தைப் படித்து விட்டு முழு நூலையும் விமர்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது போலவே, பெரியார் எனும் கருத்தியலை வெறும் அனுமானங்கள், வரலாற்றுத் திரிபுகள், ஒரு நிகழ்வு கொண்டு புறணிக்க எண்ணுவோர் ஒரு முறை முழுமையாகப் படித்துத் தெரிந்து விட்டு எதிர்க்கலாம். அறிவைப் பெருக்கிக் கொள்வதே அவர் வழியுறுத்திய கருத்தியல்.
“யார் சொல்லியிருந்தாலும் எங்கு படித்திருந்தாலும்
நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது
அறிவுக்கும் பொருந்தாத எதையும் நம்பாதே”
― தந்தை

"சாதீ ஒழிப்பு என்பது இரண்டு புரியா மந்திரம் சொல்லி இல்லாத் தோசம் தீர்ந்தது என்று புரட்டும் ஏமாற்று காரியம் அல்ல."
ReplyDeleteஅருமையான உண்மை