Skip to main content

அழகிய காலம்


இரவு நேர வேளை பள்ளிபாடத்தை வேகமாக முடித்து; வந்து விடுவோம் தெருகளுக்கு..

வந்து விட்டார்கள் என சலித்துக் கொண்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள் வாசலில் வீட்டு கதை பேசும் அம்மாமார்கள், அத்தைமார்கள், பாட்டிமார்கள்..

ஒரு சில ரசிக்கும் திறன் கொண்டோரே அமர்ந்திருப்பார் வாசலிலே..

நாங்கள் அனைவரும் வந்துவிட்டோமா என்று சோதித்து விட்டு; வராதவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வீடுகளில் சில பல திட்டுகள் காதுகளில் வாங்கிக்கொண்டும் அவர்களையும் கையோடு அழைத்து வந்து விடுவோம்..

பெரும்பாலும் கண்ணாமூச்சியே விளையாடிக் கழிப்போம்..

அடுத்தவர் வீடுகளுக்குள் அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொள்வோம்..

பல முறை அந்த வீட்டுக்காரர்களிடம் சிக்கித் திட்டு வாங்கிக் கொண்டும், நிறைய நேரம் ஆகியும் நீ கண்டுபிடிக்காததால் தானாக வந்தாக சொல்லி வெளி வந்து விடுவோம்..

ஒருசில வீட்டுக்காரர்கள் ஒளிந்தது தெரிந்தும் கண்டுபிடிப்பவர் கேட்டால் யாரும் இல்லையே என்று சொல்லி விளையாட்டுக்குள் அவர்களும் சேர்ந்துகொள்வர்..

10 மணி நெருங்கும் போது கண்டுபிடிக்க வருபவரை வர சொல்லிவிட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்று விடுவோம்; தேடி அலைந்து விட்டு அவரும் கிளம்பிவிடுவார்..

அது எப்படி விளையாட்டு மாறுகின்றது என்பது தெரியாது.
சில கால கட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டும் மாறிக்கொண்டிருக்கும்..
சிமெண்ட் தரை போட்ட சாலையெனினும் கபடி விளையாட்டையும் விடவில்லை..

சீராய்ப்புகளும் முட்டிப்பேய்ந்து விடுதலும் அடிக்கடியும் ஒருசில மண்டை உடைப்புகளும் சந்தித்த காலகட்டம்..
சீராய்ப்பையும் அழுகையும் கொண்டு வீட்டுக்குச் சென்று மேற்கொண்டு அதற்கு அடியும் மருந்தும் போட்டுக்கொள்வோம்..

அடுத்து எங்களைத் தவிர்த்து பார்ப்போரை ரசிக்க செய்யாத விளையாட்டான எறிபந்துக்கு மாறினோம்..

2 ரூபாய் பிளாஸ்டிக் பந்து வாங்கிக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து மற்றொரு குறிப்பிட்ட வீடு வரை ஆடுகளமாக மாற்றி; அதற்குள் மாற்றி மாற்றி ஒருவர் மேல் ஒருவராக ஏறிவது..

பெரும்பாலும் யாரேனும் ஒருவரை குறி வைத்து தான் அன்றைய விளையாட்டு போகும்..

எங்களையே சில காலம் கழித்து அந்த விளையாட்டை எண்ணிப் பார்த்து முகம் சுளித்து, இப்பிடிலாம் எப்படி விளையாடினோம் என்று எண்ண வைத்தது; விளையாட்டில் மூழ்கி விடும் போது அந்த பந்து தெருவோர கால்வாயில் விழுந்தாலும் அடுத்த நொடி எடுத்து அப்படியா அடுத்தவர் மீது எறிந்து விடுவது தான்..

பந்தை கழுவுதற்கு எல்லாம் அங்கே நேரமிருக்காது. மாட்டியவுடன் பிறர் மேல் எறிந்து விட வேண்டியது தான் ..

அடுத்து பெரிய கால பொழுதை முழுவதும் எடுத்துக்கொண்டது கிரிக்கெட் .10ஆம் வகுப்பு வரை தெருக்களில் தான் விளையாடியது. அதற்கு மேல் தான் கிரவுண்ட்..
கிரவுண்ட் செல்ல தொடங்கிய பிற்பாடு கிரிக்கெட் முழு நேரம் ஆனது..அதைப் பற்றி தனியாக ஒரு நாள் எழுத்திக்கொள்ளலாம் என அதற்கு முன்பு நடந்ததை மட்டும் தொடர்கிறேன்..

ஒருவனிடம் மட்டுமே இருக்கும் பேட். அதனால் அவனே அணி தலைவன் ஆகிறான். அவன் முடிவே இறுதி ஆகிவிடும் போன்ற எழுதப்படாத விதிமுறைகள் வந்து விடும்..

தினமும் இரவு மற்றும் விடுமுறை நாள் என்றால் காலை முதல் என சாப்டிற்கு மட்டுமே வீடு என தெருவிலே பொழுதைக் கழித்தோம்..

பந்து அடிக்கடி சுற்றியுள்ள வீடுகளின் மாடிகளில் புகுந்து விடும்; அப்படி அடிப்பவர் அவுட் என்ற போதும் அது தொடர்ந்த நிகழ்வு தான்..

சுற்றியும் பெரும்பாலும் எங்கள் வீடு தான் இருக்கும் என்பதால் பந்தை உடனே எடுத்து விடுவோம்..
அந்த நேரத்திலும் சிலர் வீட்டுக்கு ஓடி விடுவதும் உண்டு..

சிலர் வீடுகளில் பந்து விழுந்து விட்டால்; மறுபடியும் பந்து வந்தால் கொடுக்க மாட்டோம் என்று மறுபடியும் மறுபடியும் பந்து விழும் போதும் சொல்லிக் கொண்டிருப்பர்..

நாங்களும் இனிமே வராது வராது என ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டு வாங்கி விடுவோம்..
அதில் மட்டும் ஒரு பாட்டி வீடு இருக்கும். அங்கு விழுந்தால் அந்த பாட்டி ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு தான் பந்தைக் கொடுக்கும்..

சில நேரங்களில் காணவில்லை என்று சொல்லி விழும் பந்துகளைச் சேர்த்து வைத்து,  மொத்தமாக 6, 7 பந்துகளை 10, 15 ரூபாய்க்கும் கொடுக்கும்..

இவ்வாறாக தெருக்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து விளையாடிக் கழித்த கடைசி தலைமுறை என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்..

ஆனால் இப்போது எங்களையும் அடுத்து வந்தவர்களையும் கைபேசியே தனதாக எடுத்துக் கொண்ட பின்,  தெருக்களை நடமாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி அதன் அழகியலை இழந்து இருப்பதையும் பார்க்கிறோம்..

"அது ஒரு அழகிய காலம்"
  

                                       -இராசை இராம்

Comments

  1. ஆமாம், அழகிய காலம் 😍 மலரும் நினைவுகள்.... 👌🏾👏🏽 சிறு வயது நிகழ்வுகளை தோண்டி எடுத்து கண்ணுக்கு முன்னாடி போட்டுட்டீங்க...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

என்ன எழுதுவது?

என்ன எழுதுவது உன்னைப் பற்றி? கதையா, கட்டுரையா, கவிதையா? என்ன எழுதினாலும் அவற்றை முடித்து விட முடியுமா? எங்கேயிருந்து தொடங்குவது, நான் தொடங்குவது தான் தொடக்கமா இருக்குமா? சொல்ல நினைப்பதை எழுத்துக்களில் கொண்டு வந்து விட முடியுமா? இல்லை, சொல்ல நினைப்பதைத் தான் இது தானென்று என்னால் வரையறுக்க முடியுமா? ஒருவேளை எழுதி முடித்த பின், எழுதிய திருப்தி கிடைத்திடுமா? ஏன், நீ மட்டும் இப்படி எனக்காக? இன்னும் எண்ணற்ற கேள்விகள், என்னிலே உன்னை எழுதத் தொடங்க  நினைத்தாலே எழுகிறது. தோல்வி தான் கிட்டும் உன்னைப் பற்றி எழுத நினைத்தால்; தோல்வியை யார் தான் விரும்புவார். இருப்பினும் ஏற்கிறேன், முயல்கிறேன். ஒருவர் இயங்கிட தேவையானக் கூறனைத்தும் தந்திடவல்ல இயக்கோன்.. அன்பின் அறத்தின் வழி பிறழா நின்று பழிச்சுமை கொண்டோன்.. உன் இழப்பினால் என் இழப்பினைத் தவிர்த்து நின்றோன்.. நீ அடையாப் போனவற்றையும் யாம் அடைய வழி செய்தோன்.. நிகழ்வை, நம்பிக்கையை, தோல்வியை நோக்கும் கண்ணோட்டத்தினைக் கற்றுகொகொடுத்தோன்.. நடைமுறை புரிந்துணர்வினை எண்ணில் விதைத்திட்டோன்.. ...
கயல் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவள். திருவிழாவிற்கு ஊருக்கு வந்தவள் , வீட்டிற்கு வந்து சிறு தூக்கம் கொண்டு பேருந்தில் கொண்டு வந்த அலுப்பையெல்லாம் முடித்து விட்டு , சென்னையில் நடந்த சில நிகழ்வுகளைச் சொல்லி , காலை உணவையெல்லாம் முடித்த விட்டு ஊர்காரியாக மாறியப் பின் , மகள் வந்திருப்பதால் அவளுக்கு பிடித்தத்தைச் செய்ய வேண்டுமென சமையலில் மூழ்கியிருந்த அம்மாவிடம் , " அம்மா! சிறுகிழங்கு , கேரட் பொரியல் தான சரியா ? " என்று மாதுளைச் சாரைக் குடித்து முடித்து விட்டு சமைக்கக் கழுவி வைத்திருந்த கேரட்டைக் கடித்தபடி கேட்கிறாள். " ஆமா அதுவும் தான்" என கன்னத்தில் செல்லக் கிள்ளலுடன் சிறுபுன்னகையுடன் வருகிறது பதில்.. " சரிமா , வீட்டுக்கு வர வழில பாத்தேன் , திருவிழா போஸ்டருலலாம் கமிட்டி தலைவர் ன்னு குமார் பேரைப் போட்டுருக்காங்க ? கருப்பசாமி அவருக்கு என்னாச்சு ? எப்பயும் கருப்பசாமி தான இருப்பாரு!" கருப்பசாமி அந்த ஊரில் பெரிய மளிகைக்கடைக்காரர் ; மூன்று தலைமுறை கடந்து இயங்கி வருகிறது அந்தக் கடை. அதனாலே மளிகை கருப்பசாமி என்பது பெயரானது. நி...

அண்ணல் ஒரு ஆக்கப்பூர்வமான போராட்ட வழிமுறை

  போராட்டங்கள் என்பது எப்போதும் ஆக்கப்பூர்வமானதாக இருத்தல் வேண்டும். அது மட்டுமே அதன் நோக்கத்தினை நிறைவேற்றும் பாதைக்கு வழி நடத்திச் செல்லும்.  அறிவுசார் சமூகத்தினால் தான் அறஞ்சார் சமூகமாக வாழ்தல் முடியும். அறிவுசார் சமூகம் பெற்றிட கல்வி ஒன்றே முதன்மையான மூலதனம்.  அக்கல்வியைப் பெருஞ்சமூகம் பெற்றிடக் கூடாதென வன்மமாகவே ஒரு பிரிவினர் தடுத்து வந்துள்ளனர்.   பல ஒடுக்குமுறைகளைத் தாண்டி பெற்ற கல்வி ஒரு மனிதனை எந்த நிலைக்கு உயர்த்தும் என்பதற்கான எடுத்துக்காட்டாய் இச்சமூகத்திற்கு வாழ்ந்தமைந்தவர் தான் அண்ணல் அம்பேத்கர்.  அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தடுக்கப்பட்டது யாவும் கிடைக்கப்பெற வழி செய்தலே சமூக நீதியெனும் அறமாகும் .  அச்சமூகநீதிப் போராட்ட முன்னெடுப்புகளில் விளைந்த பயிர்களின் விளிம்பில் இருந்துவிட்டு  உங்களின் வேர்களைப் பற்றி அறியாது, பிதற்றிக் கொண்டு, உங்கள் வருங்கால தலைமுறையினர் தளிர்களுக்கு நீங்களே களையாகி பட்டுப்போய் விடாது ; வேர்களைப் பற்றி அறிய முனைந்திடுக.  அம்பேத்கர் உங்கள் வாழ்வு சற்று துளிர் விட வழி செய்த வேர்களில் ஒருவர். அ...