இரவு நேர வேளை பள்ளிபாடத்தை வேகமாக முடித்து; வந்து விடுவோம் தெருகளுக்கு..
வந்து விட்டார்கள் என சலித்துக் கொண்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள் வாசலில் வீட்டு கதை பேசும் அம்மாமார்கள், அத்தைமார்கள், பாட்டிமார்கள்..
ஒரு சில ரசிக்கும் திறன் கொண்டோரே அமர்ந்திருப்பார் வாசலிலே..
நாங்கள் அனைவரும் வந்துவிட்டோமா என்று சோதித்து விட்டு; வராதவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களின் வீடுகளில் சில பல திட்டுகள் காதுகளில் வாங்கிக்கொண்டும் அவர்களையும் கையோடு அழைத்து வந்து விடுவோம்..
பெரும்பாலும் கண்ணாமூச்சியே விளையாடிக் கழிப்போம்..
அடுத்தவர் வீடுகளுக்குள் அவர்களுக்கே தெரியாமல் ஒளிந்து கொள்வோம்..
பல முறை அந்த வீட்டுக்காரர்களிடம் சிக்கித் திட்டு வாங்கிக் கொண்டும், நிறைய நேரம் ஆகியும் நீ கண்டுபிடிக்காததால் தானாக வந்தாக சொல்லி வெளி வந்து விடுவோம்..
ஒருசில வீட்டுக்காரர்கள் ஒளிந்தது தெரிந்தும் கண்டுபிடிப்பவர் கேட்டால் யாரும் இல்லையே என்று சொல்லி விளையாட்டுக்குள் அவர்களும் சேர்ந்துகொள்வர்..
10 மணி நெருங்கும் போது கண்டுபிடிக்க வருபவரை வர சொல்லிவிட்டு அனைவரும் வீட்டுக்குச் சென்று விடுவோம்; தேடி அலைந்து விட்டு அவரும் கிளம்பிவிடுவார்..
அது எப்படி விளையாட்டு மாறுகின்றது என்பது தெரியாது.
சில கால கட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டும் மாறிக்கொண்டிருக்கும்..
சில கால கட்டத்தில் ஒவ்வொரு விளையாட்டும் மாறிக்கொண்டிருக்கும்..
சிமெண்ட் தரை போட்ட சாலையெனினும் கபடி விளையாட்டையும் விடவில்லை..
சீராய்ப்புகளும் முட்டிப்பேய்ந்து விடுதலும் அடிக்கடியும் ஒருசில மண்டை உடைப்புகளும் சந்தித்த காலகட்டம்..
சீராய்ப்பையும் அழுகையும் கொண்டு வீட்டுக்குச் சென்று மேற்கொண்டு அதற்கு அடியும் மருந்தும் போட்டுக்கொள்வோம்..
அடுத்து எங்களைத் தவிர்த்து பார்ப்போரை ரசிக்க செய்யாத விளையாட்டான எறிபந்துக்கு மாறினோம்..
2 ரூபாய் பிளாஸ்டிக் பந்து வாங்கிக் கொள்வோம். ஒரு குறிப்பிட்ட வீட்டிலிருந்து மற்றொரு குறிப்பிட்ட வீடு வரை ஆடுகளமாக மாற்றி; அதற்குள் மாற்றி மாற்றி ஒருவர் மேல் ஒருவராக ஏறிவது..
பெரும்பாலும் யாரேனும் ஒருவரை குறி வைத்து தான் அன்றைய விளையாட்டு போகும்..
எங்களையே சில காலம் கழித்து அந்த விளையாட்டை எண்ணிப் பார்த்து முகம் சுளித்து, இப்பிடிலாம் எப்படி விளையாடினோம் என்று எண்ண வைத்தது; விளையாட்டில் மூழ்கி விடும் போது அந்த பந்து தெருவோர கால்வாயில் விழுந்தாலும் அடுத்த நொடி எடுத்து அப்படியா அடுத்தவர் மீது எறிந்து விடுவது தான்..
பந்தை கழுவுதற்கு எல்லாம் அங்கே நேரமிருக்காது. மாட்டியவுடன் பிறர் மேல் எறிந்து விட வேண்டியது தான் ..
அடுத்து பெரிய கால பொழுதை முழுவதும் எடுத்துக்கொண்டது கிரிக்கெட் .10ஆம் வகுப்பு வரை தெருக்களில் தான் விளையாடியது. அதற்கு மேல் தான் கிரவுண்ட்..
கிரவுண்ட் செல்ல தொடங்கிய பிற்பாடு கிரிக்கெட் முழு நேரம் ஆனது..அதைப் பற்றி தனியாக ஒரு நாள் எழுத்திக்கொள்ளலாம் என அதற்கு முன்பு நடந்ததை மட்டும் தொடர்கிறேன்..
ஒருவனிடம் மட்டுமே இருக்கும் பேட். அதனால் அவனே அணி தலைவன் ஆகிறான். அவன் முடிவே இறுதி ஆகிவிடும் போன்ற எழுதப்படாத விதிமுறைகள் வந்து விடும்..
தினமும் இரவு மற்றும் விடுமுறை நாள் என்றால் காலை முதல் என சாப்டிற்கு மட்டுமே வீடு என தெருவிலே பொழுதைக் கழித்தோம்..
பந்து அடிக்கடி சுற்றியுள்ள வீடுகளின் மாடிகளில் புகுந்து விடும்; அப்படி அடிப்பவர் அவுட் என்ற போதும் அது தொடர்ந்த நிகழ்வு தான்..
சுற்றியும் பெரும்பாலும் எங்கள் வீடு தான் இருக்கும் என்பதால் பந்தை உடனே எடுத்து விடுவோம்..
அந்த நேரத்திலும் சிலர் வீட்டுக்கு ஓடி விடுவதும் உண்டு..
அந்த நேரத்திலும் சிலர் வீட்டுக்கு ஓடி விடுவதும் உண்டு..
சிலர் வீடுகளில் பந்து விழுந்து விட்டால்; மறுபடியும் பந்து வந்தால் கொடுக்க மாட்டோம் என்று மறுபடியும் மறுபடியும் பந்து விழும் போதும் சொல்லிக் கொண்டிருப்பர்..
நாங்களும் இனிமே வராது வராது என ஒவ்வொரு முறையும் சொல்லிக்கொண்டு வாங்கி விடுவோம்..
அதில் மட்டும் ஒரு பாட்டி வீடு இருக்கும். அங்கு விழுந்தால் அந்த பாட்டி ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு தான் பந்தைக் கொடுக்கும்..
சில நேரங்களில் காணவில்லை என்று சொல்லி விழும் பந்துகளைச் சேர்த்து வைத்து, மொத்தமாக 6, 7 பந்துகளை 10, 15 ரூபாய்க்கும் கொடுக்கும்..
இவ்வாறாக தெருக்களை முழுமையாக ஆக்கிரமிப்பு செய்து விளையாடிக் கழித்த கடைசி தலைமுறை என்ற பெருமையைப் பெற்றுள்ளோம்..
ஆனால் இப்போது எங்களையும் அடுத்து வந்தவர்களையும் கைபேசியே தனதாக எடுத்துக் கொண்ட பின், தெருக்களை நடமாடுவதற்கும் மட்டுமே பயன்படுத்தி அதன் அழகியலை இழந்து இருப்பதையும் பார்க்கிறோம்..
"அது ஒரு அழகிய காலம்"
"அது ஒரு அழகிய காலம்"
-இராசை இராம்
ஆமாம், அழகிய காலம் 😍 மலரும் நினைவுகள்.... 👌🏾👏🏽 சிறு வயது நிகழ்வுகளை தோண்டி எடுத்து கண்ணுக்கு முன்னாடி போட்டுட்டீங்க...
ReplyDeleteநன்றி😍🙌🤗
Delete